இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது: ராம.கோபாலன்

நெல்லை மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து கோவில்களின் உரிமை மீட்பு மாநாடு வள்ளியூர் கலையரங்கில் நடந்தது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் சென்னையில் இருந்து ரெயில் மூலம் வள்ளியூருக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் எல்லாம் கிடைக்க வேண்டும். அதை மீட்பதற்காக வள்ளியூரில் மாநாடு நடத்துகிறோம். இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசியல் சாசனத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அதனை நடைமுறைப்படுத்த யாருக்கும் தைரியம் வர வில்லை.

முதன்முதலாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா அவரது மாநிலத்தில் நடை முறைப்படுத்தினார். பின்னர் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பு இந்த திட்டத்திற்கு ஒரு நல்ல விளம்பரம் ஆகும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அவர் அரசியலுக்கு வருவதாக சொன்னால் அதன் பிறகு நான் அதுகுறித்து கருத்து சொல்லுகிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளாரே? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் (கமல்ஹாசன்) அரசியலுக்கு வரலாம். வேறு யாரும் வரக்கூடாது. அவ்வளவு புத்திசாலி அவர். மகாபாரதத்தை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இங்குதான்.

ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். சொல்பவர்தான் வேட்பாளர் என்று கூறுகிறார்களே என்று கேட்கிறீர்கள். நாங்கள் முழு மெஜாரிட்டியில் உள்ளோம். அதனால் நாங்கள் தான் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவோம். இந்து அமைப்புகள் பிரிந்து கிடக்க வில்லை. அதனை போன்று ஒரு மாயையை உருவாக்கி பிளவுபடுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.