உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: திருநாவுக்கரசர் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி ராமசுப்பு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்ட 3 மாவட்ட தலைவர்களும் ஒற்றுமையாக இங்கு இருப்பதுபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியையும்,பிரதமராக ராகுலையும் கொண்டு வந்துவிடலாம். காமராஜர் இருக்கும்போது காங்கிரஸ் தமிழகத்தில் முதல் இடத்தில் இருந்தது.

தென்மாவட்டங்கள் முழுவதும் காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்தது. அதே எழுச்சியை இன்றைய சுற்றுப்பயணத்திலும் நான் பார்க்கிறேன். இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில் மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர நாம் சபதம் எடுத்து அதை செயல்படுத்த உழைக்க வேண்டும். சில நேரங்களில் என் மீது கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுகிறது.

தேர்தல் நேரங்களில் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். மற்ற நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு தேவையானதை மட்டுமே செய்வேன். நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. எனவே என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்தே பேசுகிறேன். தமிழகத்தில் முதல் கட்சியாக காங்கிரசை கொண்டுவர என்ன செய்ய வேண்டுமோ அதை நோக்கியே என்னுடைய பயணம் தொடரும்.

அதற்கு சில காலங்கள் ஆகலாம். பல தலைவர்கள் வந்தாலும் அதை நோக்கியே அவர்களுடைய பயணம் தொடர வேண்டும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி பேசலாம். அப்போது எந்த கட்சி கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக வெற்றிகளை பெறுகிறதோ அதன் தலைவர் முதல்வர் ஆவார். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் மட்டும் தான் கட்சி சின்னங்களில் போட்டியிட முடியும்.

பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் கிடையாது. அப்பதவிகள் மட்டும் தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்கள் உள்ளது. இதில் அனைத்து பதவிகளும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். இதில் சின்னங்கள் கிடையாது என்பதால் கூட்டணி கிடையாது. இதில் வெற்றி பெற்றாலே தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைத்து விடலாம்,

இந்தியாவில் பசுமை புரட்சியை ஏற்படுத்தியவர் இந்திரா. தலித் மக்களுக்காக அதிகம் பாடுபட்டவர். இந்தியாவில் பல புரட்சி கர திட்டங்களை கொண்டு வந்து இந்திய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். 20 அம்ச திட்டங்களை கொண்டு வந்தவர். தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கி ஏழை மக்களுக்கு உதவியவர். வாஜ்பாய் இந்திராவை ஆதி பராசக்தி என்று புகழும் அளவுக்கு அவருடைய செயல்பாடு இருந்தது.

மோடி ஆட்சி அமைக்கும் முன்பு ஒவ்வொருவர் பேங்க் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னார். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது. இதை மத்திய அரசே ஆட்டுவிக்கிறது. அ.தி.மு.க பல அணிகளாக உள்ளது. வருகிற ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க வினரை மத்திய அரசு மிரட்டுகிறது. அ.தி.மு.க பலவீனமாய் உள்ளது. இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்

இவ்வாறு அவர் பேசினார்.