யாழ். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக வல்வெட்டித்துறை மண்ணைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்ட போதிலும் சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போட்டு அதற்கு தடைவிதித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விமான்கள் பாதிக்கப்படக்கூடாது. இந்த மண்ணைச்சேர்ந்த ஒருவர் துணை வேந்தராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அவர் அந்தப் பதவிக்கு இறுதியில் தெரிவாகவில்லை.
சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போட்டு இதனை நிராகரித்துள்ளனர். ஒரு சில அரசியல்வாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தில் பிச்சை எடுக்கின்றனர்.
இவ்வாறு இவர்கள் பிச்சை எடுக்கவோ, துரோகிகளாகவோ கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசுக்கு எதிராக இனவாதம் தூண்டப்படுகின்றது.
கடந்த அரசாங்க காலத்தில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டனவே தவிர அவை மீளவும் வழங்கப்படவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மக்களின் காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் 3000 ஏக்கர் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது என்பதற்கிணங்க ஆழிக்குமரனின் சாதனைகள் இன்று நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சர் மேற்கொள்கின்றார்.
வடக்கில் பாடசாலைகள், அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்றன. கட்டடங்கள், தளபாடங்கள், இல்லாத நிலையில் பல பாடசாலைகள் உள்ளன. இத்தகைய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உரிய நிதி வழங்கப்படவேண்டும்.
வெளியுறவு அமைச்சராக மங்கள சமரவீர பதவி வகித்தபோது புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளுடன் நல்லுறவை கொண்டிருந்தார். அதற்காகவும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழிக்குமரனைப் போன்ற மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர்களின் பட்டியல் இன்னமும் நீளவேண்டும். தமிழ் பேசும் மக்கள் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் நல்லாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.
2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே பாதைகள் திறக்கப்பட்டன. கடல், தரை, ஆகாய மார்க்கமான போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்தமையினால் கடந்த காலத்தில் நாம் உணவின்றித் தவித்தோம்.
அந்த வேளையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் ஒன்றுமே செய்யவில்லை.அன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஆயுதக்குழுக்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்த துரோகிகளாக செயற்பட்டனர்.
ஊடகவியலாளர்கள் உட்பட பலரையும் கொலை செய்ததுடன் கப்பம் பெற்று வந்தனர். இத்தகைய நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே நல்லாட்சிக்கு தமிழ் பேசும் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.