நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அமித்ஷா கூறினார்.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜனதா தனது வேட்பாளரை முடிவு செய்து விட்டதா?
பதில்: இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. என் மனதில் ஒரு வேட்பாளரை வைத்திருந்தாலும் கூட முதலில் அதுபற்றி கட்சிக்குள் விவாதிக்கப்படவேண்டும்.
கேள்வி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக ஆளும் பா.ஜனதா கூட்டணி அறிவிக்கவேண்டும் என்று சிவசேனா கூறி இருக்கிறதே?…
பதில்: இதுபோன்ற எந்த யோசனையையும் ஏற்கப்போவதில்லை என்று ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். கூறிவிட்டது. இந்த பரிந்துரையை நானும் ஏற்கவில்லை.

கேள்வி: பிரபல நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பார் என்று கூறப்படுகிறதே, அவர் பா.ஜனதாவில் சேருவாரா?…
பதில்: இதுபற்றிய முடிவை அவர்தான் எடுக்கவேண்டும். எங்கள் கட்சியின் அமைப்புக்குள் எந்த நல்ல மனிதர்கள் வந்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்.
கேள்வி: காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறதே?…
பதில்: காஷ்மீரில் கள நிலவரத்துக்கும், எதிர்பார்ப்பிற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது. அங்கு 3 மாவட்டங்களில்தான் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மோடி அரசு இதை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் அரசு எடுத்த கொள்கை முடிவுகள் தவறானதாக அமைந்தன. அதனால்தான் அங்கு நிலைமை மோசமானது. எனவே காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச காங்கிரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
கேள்வி: மோடி அரசின் 3 ஆண்டு சாதனையாக எதை கருதுகிறீர்கள்?…
பதில்: பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வைத்திருப்பதே மிகப்பெரிய நற்சான்று ஆகும்.
மோடி அரசு குடும்ப ஆட்சி, சாதிய மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதில் இருந்து நாட்டை விடுவித்து சிறப்பான ஆட்சி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்தது. ஆனால் இந்த 3 ஆண்டுகளில் மோடி அரசுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூட எதிர்க்கட்சிகளால் கூற முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.







