ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தனது குடும்பத்துடன் போயஸ் கார்டன் வீட்டில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சசிகலா மற்றும் அவரது உறவினர்களுடன் தீபக் நெருக்கமாக இருந்தார்.
மேலும், மருத்துவமனையின் முக்கிய ஆவணங்களில், தீபக் கையெழுத்திட்டதோடு, ஜெயலலிதாவின் இறுதி சடங்கிலும் பங்கேற்றார்.
சசிகலாவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் தீபக் அவரை சிறையில் சென்று சமீபத்தில் சந்தித்தார்.
சசிகலாவுக்கு, தீபக் ஆதரவு தெரிவித்தாலும், அவர் சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் கட்சிக்கு தலைமையை ஏற்கும் நிலை வந்த போது, தினகரனின் தலைமையை ஏற்க முடியாது என்று தீபக் அறிவித்தார்.
பின்னர், ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எனது அத்தையின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மீது எனக்கும், என் சகோதரி தீபாவுக்கும் மட்டுமே உரிமை உள்ளது என தீபக் கூறினார்.
இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் தீபக் குடியேற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அந்த வீட்டில் முன்னர் தீபக்குக்கு ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தன் குடும்பத்தினருடன், போயஸ் பங்களாவில் முழுமையாக குடியேற தீபக் திட்டமிட்டுள்ளார்.
அதற்கான நல்ல நாள் பார்த்துச் சொல்லும்படி, ஜோதிடர்களிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







