டோனியின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது: மனோஜ்திவாரி பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் 58 ரன்கள் எடுத்த புனே அணி வீரர் மனோஜ்திவாரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடைசி 2 ஓவர்களில் ஆட்டத்தின் உத்வேகத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 18-வது ஓவர் வரை நாங்கள் தடுமாறினோம். டோனி சில அதிரடியான ஷாட்களை அபாரமாக ஆடினார். பும்ரா பந்து வீச்சில் அதுபோன்று அடித்து ஆடுவது கடினமான காரியமாகும். ஆனால் தான் எவ்வளவு உயர்ந்த திறமை வாய்ந்த வீரர் என்பதை டோனி நிரூபித்தார்.

கடைசி கட்டத்தில் டோனி அடித்த சிக்சர்கள் அணியின் ஸ்கோர் உயர உதவிகரமாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். மும்பை அணி பவர்பிளேயில் சில விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி அதில் இருந்து மீண்டு வராமல் பார்த்து கொண்டோம். ஒரு ஓவரில் 2 விக்கெட் உள்பட 3 விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தியது மும்பை அணியின் ரன் சேசிங்கை முடக்கி விட்டது.

அணிக்கு நான் அளித்த பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது பணியை நன்றாக செய்தார். இந்த வெற்றிக்கு ஒருவர் மட்டும் காரணம் சொல்ல முடியாது. அணியில் உள்ள எல்லோரும் தங்களது பங்களிப்பை சரியாக அளித்தனர். பீல்டர்களை எங்கு நிறுத்துவது என்பது உள்பட பல விஷயங்களில் கேப்டனுக்கு டோனி உதவிகரமாக இருந்தார். வீரர்கள் சரியான இடத்தில் நின்று பீல்டிங் செய்ய டோனி ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறு மனோஜ்திவாரி கூறினார்.