இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு விஜயம்மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 03, காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, மோடி இந்த அழைப்பினை விடுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அரசியல் தொடர்பில் எந்த கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என அரசியல் உயர் மட்ட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசியல் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த ஊடகத்துடன் கலந்துரையாடிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அரசியல் குறித்து ஆழமான கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சந்திப்பு ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் வேறு சில ஊடகங்கள் 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்ததாகவும், இன்னும் சில ஊடகங்கள் 15 நிமிட சந்திப்பு என்றும் கூறியுள்ளன என்று குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, உண்மையில் எவ்வளவு நேரம் சந்திப்பு நடந்தது என்று தன்னால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்காக மகிந்த ராஜபக்சவுடன் கோத்தாபய ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்தியப் பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.
எனினும் கலந்துரையாடல் மண்டபத்தில், மூடிய அறைக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் மோடியும் தனியாகப் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்ததாகவும், ஏனையோர் வெளியே காத்திருந்தனர் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.







