யாழ்ப்பாணத்தின் இளைய தலைமுறைச் சொற்பொழிவாளர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிலரில் முன்னணியிலிருந்த சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் நித்தியதசீதரன் (N.T. தரன்) சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டிருந்த நித்திய தசீதரனுக்குத் திடீரெனச் சுவாசக் கோளாறு ஏற்பட்ட நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று சனிக்கிழமை(13) காலை உயிரிழந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையாரான அவருக்கு இறக்கும் போது 42 வயது. இந்து தர்மாசிரியரான நித்திய சசிதரன் இந்து தர்மாசிரியர் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்று ஜனாதிபதி விருது பெற்ற சிறப்புக்குரியவர்.
இவர் யாழ்.குடாநாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் தொடர்ச்சியாக ஆற்றி வந்தவர். சிறந்த நேர்முக வர்ணனையாளராகவும் இவர் விளங்கினார். அத்துடன் பாடசாலைகளிலும், அறநெறிப் பாடசாலைகளிலும் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் மூலம் மாணவர்களுக்குப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பிரபலமான ஆலயங்கள் உட்படப் பல்வேறு ஆலயங்களிலும் தேர் போன்ற விசேட உற்சவ தினங்களில் கலந்து கொண்டு நேரடி வர்ணனைகளையும் மேற்கொண்டிருந்தார்.
எப்போதும் புன்னகை சிந்தும் முகத்துடன் காணப்பட்ட நித்திய தசிதரன் தன வசீகரிக்கும் குரலால் அனைவரையும் எளிதில் கவரும் ஒருவராகவும் திகழ்ந்தார்.
சைவசமய விழுமியங்களையும், எமது பண்பாட்டுப் பெருமைகளையும் தனது சொற்பொழிவுகளுடாகச் சமூதாயத்தின் பல்வேறு மட்டங்களுக்கும் எடுத்துச் சென்ற
நித்திய தசீதரன் தன் இறுதி மூச்சுள்ள வரை சைவசமய பண்பாட்டைப் பின்பற்றிய ஒருவராகவும் வாழ்ந்து காட்டினார். இவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) பன்னாலையிலுள்ள அன்னாருடைய இல்லத்தில் இடம்பெறும்.







