எடப்பாடி பழனிசாமியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தினோம்.

1. தமிழகத்தில் 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மகன், மகள் இருந்தாலும் ஓய்வூதியம் தர வேண்டும்.

2. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்காக வழக்கு தொடரப்பட்டு வருகிறது. வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. கரும்புக்கு நிலுவை தொகை 5 மாதமாகியும் இன்னும் தரப்படாமல் உள்ளது. அதை வழங்க வேண்டும். மாநில அரசு அறிவித்த தொகையும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. ஏரி குளங்களை விவசாயிகளும் தூர்வாரி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அப்பீல் போக கூடாது என்று வலியுறுத்தினோம்.

அமராவதி ஆற்றில் இருந்து கே. பரமத்திவேலூருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றோம்.

எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். வருகிற 18-ந் தேதி மாலையில் மீண்டும் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம்.

நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகளை திரட்டி மே 21-ந் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்றத்தையோ, பிரதமர் அலுவலகத்தையோ முற்றுகையிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அய்யாக்கண்ணுவுடன் சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் கிட்டப்பாரெட்டி பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேலு, சுவாமிமலை விமலநாதன், ஐகோர்ட்டு வக்கீல் ஸ்ரீதர் ஆகியோரும் உடன் சென்றனர்.