இனப்படுகொலை நினைவு நாளில் களியாட்டங்கள் ஏதும் வேண்டாம்! சிவில் அமைப்புகள் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் நாளில் கேளிக்கை நிகழ்வுகளை நடத்திப் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை நோகடிக்க வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் மே மாதம் 18 திகதியோ அல்லது அதன் பெயரிலோ எந்தவிதமான களியாட்ட நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.

எமது இனம் அழிக்கப்பட்ட அன்றைய நாளை நாம் கொண்டாட்டமாகக் கருதிவிட முடியாது. உணர்வுபூர்வமாக எமது உறவுகளுக்கு அஞ்சலி செய்து பூசிக்கும் நன்நாளில், எமக்கு நடந்த வன்கொடுமையை மறந்து கேளிக்கை நிகழ்வுகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வது எம் இனத்துக்குச் செய்யும் துரோகமாகவே கருதப்படும்.

காணாமல்போனவர்களுக்குப் பதில் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களின் காணியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதற்காகவும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவருகின்றன.

இந்தக் காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அடியொற்றிக் கேளிக்கையில் யாரும் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.