ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு நீட்டிப்பு கிடையாது: ராஜீவ் சுக்லா

ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. அதனால் கடந்த வருடமும் (2016), இந்த வருடமும் (2017) ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் பங்கேற்கவில்லை. அதற்குப் பதிலாக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்றன. இந்த இரண்டு அணிகளும் இரண்டு வருடங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.

அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுவிடும். இதனால் 10 அணிகள் பங்கேற்குமா? என்ற யூகங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில் ‘‘அடுத்த வருடம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இரண்டு அணிகளும் திரும்ப விளையாட தகுதி பெற்றுவிடும். அடுத்த ஐ.பி.எல். தொடரில் 8 அணிகளா? 10 அணிகளா? என்ற கருத்து நிலவி வருகிறது. இதுகுறித்து வரும் ஆட்சிமன்றக் குழுவில் நாங்கள் விவாதம் நடத்துவோம். இதுவரை நாங்கள் 8 அணிகளுடன்தான் சென்று கொண்டிருக்கிறோம். குஜராத் மற்றும் புனே அணிகளுக்கு நீட்டிப்பு கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர்களுடன் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என்றார்.