ஐ.பி.எல். தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியில் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், கேதர் ஜாதவ், வாட்சன், வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இருந்தாலும் அந்த அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை.
இதுவரை 12 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் புனே அணிக்கெதிராக 161 ரன்களுக்கு எதிரான சேஸிங்கில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணிக்கெதிராக 49 ரன்னில் சுருண்டது. புனே அணிக்கெதிரான 2-வது போட்டியில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியாக பஞ்சாப் அணிக்கெதிராக 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பேட்ஸ்மேன்களின் ஒட்டுமொத்த சொதப்பல் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோல் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சொதப்பிய அனுபவம் இதுதான் முதல்முறை. என்னதான் முயற்சி எடுத்தாலும், வெற்றிக்கான உத்வேகத்தை நாங்கள் பெறவில்லை’’ என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான கவாஸ்கர், சக பேட்ஸ்மேன்களை குறைகூறும் முன் கோலி செய்ய வேண்டிய முதல் வேலை, கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘முக்கியமான பேட்ஸ்மேன்கள் முறையான கிரிக்கெட் ஷாட்டுக்களை விளையாடுவதற்குப் பதிலாக கிளாமர் ஷாட்டுக்கள் விளையாடுகின்றனர். நீங்கள் ஹெிட் ஷாட்டுக்கு முயற்சி செய்யும்போது, பவுண்டரிக்கும், சிக்சருக்கும் இடையில் இரண்டு ரன்கள்தான் வித்தியாசம். ஏனென்றால், சிக்சருக்கு நீங்கள் பந்தை தூக்கி அடிக்க வேண்டும். இதனால் ஆபத்தின் சதவீதம் 100 சதவீதத்தை எட்டுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சந்தீப் ஷர்மா பந்தில் கோலி அவுட்டான பந்து மிகவும் சிறந்த ஷாட் அல்ல. அதேபோல் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியிலும் அவுட்டா ஷாட் மிகவும் சிறந்த ஷாட் அல்ல. இதனால் கோலி செய்ய வேண்டிய முதல் விஷயம் கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும்.
கோலி கேப்டன் என்பதால் அவர் முதலில் நிலைத்து நின்று விளையாட வேண்டும். தற்போது அவர் சிறந்த பாஃர்மில் இல்லை. ஆகையால் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய பின்னர், கிளாமரான ஷாட்டுக்களை அடிக்கலாம்’’ என்றார்.