சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய வருவாய் பகிர்வு முறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் கோப்பை போட்டியை புறக்கணிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். காலக்கெடு முடிந்தும் அணியை அறிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி குழு சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில் இன்று டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான அணி நாளை தேர்வு செய்யப்படுகிறது.