மகிந்தவின் பாதுகாப்பை மேலும் குறைத்தது அரசு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

குறிப்பாக, மகிந்த ராஜபக்சவிற்கு 199 உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், முன்னர் 42 பேர் குறைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 50 பேர் வரை மகிந்தவின் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பொலிஸ் பரிசோதகர்கள் 2 பேரும், உப பொலிஸ் பரிசோதகர்கள் ஐவரும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 பேரும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 39 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளமை குறித்து கூட்டு எதிர்க் கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.