ஐ.பி.எல். 2017 தொடரில் 40-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 30 ரன்னிலும், தவான் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 24 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார்.
4-வது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் ஹென்றிக்ஸ் 18 பந்தில் 25 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 ஓவரில் 59 ரன்கள் வாரி வழங்கினார்.

பின்னர், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கருண் நாயர் பேட்டிங் செய்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி இருவரும் ரன்களை குவித்தனர். ஐதராபாத் அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

24 ரன்களில் சாம்சனும் 29 ரன்களில் கருண் நாயரும் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய ரிஷி பாந்த், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 19.1 ஓவர்களில் டெல்லி அணி 189 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







