கொல்கத்தாவை முதல்முறையாக வீழ்த்தும் முனைப்பில் புனே

இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும். கொல்கத்தா அணியில் கேப்டன் கவுதம் கம்பீர் (387 ரன்), ராபின் உத்தப்பா (5 அரைசதத்துடன் 384 ரன்), மனிஷ் பாண்டே (304 ரன்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சிலும் வலுவாக காணப்படும் கொல்கத்தா அணி, பீல்டிங்கில் மெச்சும்படி இல்லை. இதை கம்பீரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எனவே பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். சொந்த ஊரில் (கொல்கத்தா ஈடன்கார்டன்) போட்டி நடப்பது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும். இந்த சீசனில் இங்கு நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் கொல்கத்தா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சரியான நேரத்தில் எழுச்சி பெற்றுள்ள புனே சூப்பர் ஜெயன்ட் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கடைசி இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றி (பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக) புனே அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. குஜராத்துக்கு எதிராக சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் கேப்டன் ஸ்டீவன் சுமித், விக்கெட் கீப்பர் டோனி, ரஹானே, மனோஜ் திவாரி, திரிபாதி ஆகியோர் பேட்டிங்கிலும், இம்ரான் தாஹிர் (16 விக்கெட்), ஜெய்தேவ் உனட்கட், டேனியல் கிறிஸ்டியன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் கைகொடுக்கிறார்கள்.

ஏற்கனவே கொல்கத்தாவுக்கு எதிரான தொடக்க லீக்கில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்த புனே அணியினர் அதற்கு பழிதீர்க்க தீவிர முனைப்பு காட்டுவார்கள். புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை வெல்லாத ஒரே அணி கொல்கத்தா மட்டுமே. ஒட்டுமொத்தத்தில் அந்த அணிக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் புனே அணி தோல்வியையே சந்தித்துள்ளது.