மகிந்தவை தண்டிக்க களத்தில் பொன்சேகா : காப்பதற்கு மூன்று புதல்வர்களும் மக்களும்!

மூன்று புதல்வர்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்சவை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவை தண்டிக்க போவதாக தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கருத்து மகிந்த மீது அவர் கொண்டிருந்த வெறுப்பை காட்டுகின்றது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அதேபோல் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்தவின் புதல்வர்களாகிய நாம் மூவரும் இருக்கும் வரை அவரை ஒன்றும் செய்து விட முடியாது.

மேலும் புதல்வர்கள் மட்டுமல்லாது அவருக்கு பின்னால் இலட்சக்கணக்கான மக்களும் இருக்கின்றார்கள். இவர்களைத் தாண்டி மகிந்தவை தண்டிப்பது சாத்தியமற்றது.

காலி முகத்திடலின் மே தினக் கூட்டம் ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியை தெளிவாக காட்டியது. அந்த கூட்டத்தைப் பார்த்து குழப்பத்தில் கூறிய கருத்துகளே அவை.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டமும் சுதந்திரக்கட்சியின் கூட்டமும் வேடிக்கையானதாக மாறிவிட்டது. இரு கூட்டங்களிலும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றார்கள்.

அப்படி என்றால் யார் ஆட்சி செய்வது? கூட்டு ஆட்சி நடைபெறவில்லையா என்ற சந்தேகம் எமக்கும் ஏற்பட்டுப் போனது.

காலி முகத்திடலுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர். அதில் இளைஞர்கள் அதிகமாக வந்திருந்தனர். அங்கு வந்திருந்த அனைவரும் இப்போதைய ஆட்சிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில் இப்போது வெளிப்பட்டுள்ள மக்கள் எழுச்சியும், தொழிற்சங்க எதிர்ப்பும் முறைகேடான ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இப்போது அனைத்து மக்களும் நாமும் கேட்பது ஓர் தேர்தலையே. வாக்கு உரிமையை நிலைநாட்டவும், மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கவும் இந்த அரசு தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி அதனை செய்து வைப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.