எமக்கான சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது : ப.சத்தியலிங்கம்

எங்களுடைய பிரச்சினைகளை அரசு மூலம் தீர்த்து கொள்வதற்கு, எங்களுடைய சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர்,

தந்தை என்று அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா அவர்களின் 40ஆவது சிரார்த்த தினத்தை இன்று (26) நினைவு கூறும் கால சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாங்கள் எல்லோரும் இந்த தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றோம்.

அதே நேரத்தில் நாங்கள் இந்த சிரார்த்த தினத்தை மாவட்ட ரீதியாக இலங்கை தமிழரசு கட்சியாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நாற்பதாவது சிரார்த்த தினம் என்று சொல்லப்படுவது தமிழ் பேசுகின்ற மக்களை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான தினமாக கருதப்பட வேண்டிய காலத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்.

இன்று யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலே, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், தமிழ் பேசுகின்ற மக்கள் நாங்கள் தொடர்ச்சியாக அடக்கு முறைக்கும் பல வகைகளில் அனுபவித்த துன்ப துயரங்களை தொடர்ச்சியாக அனுபவிக்கின்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் நாங்கள் இந்த நாற்பதாவது சிரார்த்த தினத்தை மிகவும் எளிமையாக இன்று அனுஷ்டிக்கின்றோம்.

எமது வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இன்று காணாமல் ஆக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் அவர்களை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான செய்தி இல்லாமல் அவர்கள் வீதிகளிலே மாதக்கணக்காக தங்களுடைய சத்தியாக்கிரக போராட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த மக்களுக்கு நிச்சயமாக தமிழ்தேசிய கூட்டமைப்பும், நான் சார்ந்த தமிழரசுகட்சியும் அவர்களுடைய போராட்டத்திற்கு பூரணமான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையிலே தான் வவுனியா உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரப்பட்ட அந்த ஒரு நாள் பூரண கடையடைப்பின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் எங்களுடைய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

நாங்கள் அதே நிலையிலே இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்ற செய்தியினை சொல்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் அழுத்தத்தை கொடுத்து எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களை அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவலையாச்சும் அறியக்கூடிய வகையிலே இந்த இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.

என்ற இந்த தகவலை வலியுறுத்தி நாளை நடைபெற இருகின்ற கடையடைப்பு போராட்டத்திற்கு எங்களுடைய தமிழரசு கட்சியும் அதே நேரத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்களுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். ஆகவே எங்களுடைய ஆதரவு நாளைய போராட்டத்திற்கு நிச்சயமாக இருக்கும்.

இந்த நாட்டிலே கடந்த வருடம், காணாமல் ஆக்கப்படவர்களுக்காக ஒரு நடவடிக்கை எடுப்பதற்காக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அந்த சட்டமூலம் கூட இன்று வரை கிடப்பிலே கிடப்பதாக தான் நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பான போராட்டத்தோடு எங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டது தொடர்பாக வெவ்வேறு மாவட்டங்களிலே பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதே மாதிரியாக எங்களுடைய தமிழ் பேசுகின்ற மக்களுடைய நிரந்தரமான சமாதானத்தை நோக்கி நாங்கள் நகர்வதாக இருந்தால் எங்களுடைய நாட்டிலே நிரந்தரமான அரசியல் தீர்வு வரவேண்டிய தேவை இருக்கின்றது.

அதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த எங்களுடைய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் கூட கிடப்பிலே இருப்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே தந்தை செல்வா அவர்களுடைய நாற்பதாவது சிரார்த்த தினத்திலே நாங்கள் அனைவரும் எங்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் முக்கியமாக முயற்சி எடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எங்களுடைய சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அந்த வகையிலே தான் எங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கின்றோம். நாங்கள் இந்த நாட்டிலே சமாதானமாக, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் அது முற்று முழுதாக அரசாங்கத்தினுடைய கையிலே தான் இருக்கின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னாலான அனைத்து விட்டுக் கொடுப்புகளையும் இந்த அரசாங்கத்திற்கு வழங்கி, நிரந்தரமான சமாதானத்தை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும்.

தமிழ் பேசுகின்ற மக்களுக்கு அனைத்து உரிமைகளோடும் கூடியதான தீர்வு நடக்க வேண்டும். அந்த தீர்வு எங்களுடைய நாட்டிலே அரசியல் யாப்பு திருத்ததினூடாக மாத்திரம் தான் கொண்டு வரப்படலாம் என்ற கருத்தில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடையவர்களாக இருந்ததால் தான் இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதற்கும், சிறுபான்மையினர், முஸ்லிம் மக்கள் எல்லோரும் உதவி செய்தார்கள்.

ஆனால் அந்த நம்பிக்கை இன்று பொய்யாகி விடுமோ என்ற நிலையிலே தான் நாங்கள் இப்படியான ஒரு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

இன்று நாங்கள் தந்தை செல்வா அவர்களுடைய நாற்பதாவது ஆண்டு நினைவு தினத்திலே தமிழ் பேசுகின்ற மக்கள் எல்லோரும் எங்களுக்கு நிரந்தரமான அமைதியும் சமாதானமும் வேண்டி நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

அத்தோடு இந்த அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் ஊடாக நாங்கள் எங்களுடைய இலக்கை அடைவதற்கு ஒற்றுமையாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.