அரசியலில் இருந்து என்னை விரட்ட சதி நடக்கிறது என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய பேரவையை தொடங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை என்று பெயர் வைத்து கொடியை அறிமுகம் செய்தார்.
இதையடுத்து பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம், மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என்று வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன், தனிக்கட்சியை துவங்கினார். இந்நிலையில் பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணியாற்றிய செலவு ஆகியவை மூலம் ரூ. 20 கோடி மோசடி செய்ததாக தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு சென்ற போலீஸார் பண மோசடி குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா கூறுகையில், புகார் அளித்தவர் யார் என்றே எனக்கு தெரியாது.
போலீசார் என்னிடம் நேரடியாக விசராணை நடத்தவில்லை. தவறான புகாரின் பேரில் காவலர்கள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். அரசியலை விட்டு என்னை விரட்டவே சதி நடக்கிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும். இவ்வாறு தீபா கூறினார்.







