இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
50 பேர் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க பரிந்துரைக்கும் வகையில் இலங்கை செயற்படவில்லை எனவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கைக்கு இந்த வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அண்மையில் முன்வைக்கப்பட்ட யோசனையை மேற்கோள்காட்டியுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யாமை, மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு தண்டனை வழங்காமை போன்ற விடயங்கள் யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த யோசனை குறித்து எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதித்து, அதனை நிறைவேற்ற வாக்கெடுப்பும் நடாத்தப்பட உள்ளது.
அத்துடன், யோசனையை நிறைவேற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 751 உறுப்பினர்களில் 376 வாக்குகள் அவசியம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த யோசனை நிறைவேற்றப்பட்டால், அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.







