யாழ். சிறுவர்களின் கையில் கைக்குண்டும், துப்பாக்கியும்: மாற்றியது யார்?

யாழ்ப்பாண சிறுவர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை. துப்பாக்கிதான் இருந்தது. அவர்களின் கைகளில் பந்து இருக்கவில்லை. வெடிகுண்டுதான் இருந்தது. இந்நிலையை மாற்றியவர் யார்? மகிந்த ராஜபக்ச தானே என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து வெளியிடுகையில்,

மஹிந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன் இந்த நாடு எப்படி இருந்தது என்று நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடக்கு – கிழக்கில் தமிழர்கள் கூட உரிமைகளை இழந்து காணப்பட்டனர்.

யாழ்ப்பாண சிறுவர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை. துப்பாக்கிதான் இருந்தது. அவர்களின் கைகளில் பந்து இருக்கவில்லை. வெடிகுண்டுதான் இருந்தது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய அவர்களின் கைகளில் துப்பாக்கியும், சைனைட் குப்பிகளுதான் இருந்தன. இவை அனைத்தையும் மஹிந்த மாற்றி அமைத்தார்.

அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்தார். பாடசாலைகளை அபிவிருத்தி செய்தார். வீதிகளை செப்பனிட்டுக் கொடுத்தார்.

அது மாத்திரமன்றி,அனைவரது உயிரையும் அவர் காப்பாற்றினார். நாட்டு மக்கள் அனைவரும் மரண பயத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதற்கு மஹிந்ததான் காரணம்.

அவர் இந்த நாட்டு மக்களை மாத்திரமல்ல இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளார்.

மஹிந்த இல்லாவிட்டால் இந்த இருவரும் நிச்சயமாக உயிருடன் இருந்திருக்கமாட்டார்கள். விடுதலைப்புலிகள் நிச்சயம் அவர்களைக் கொலை செய்திருப்பார்கள். இந்த நாட்டுத் தலைவர்களை விடுதலைப்புலிகள் எவ்வாறு கொன்று குவித்தனர் என்பதை நாம் மறந்துவிடவில்லை.

அப்படியானதொரு பேராபத்தில் இருந்து எம்மையெல்லாம் காப்பாற்றிய மஹிந்தவை இன்று திருடர் என்று கூறுகின்றனர். அவர் ஒரு ரூபாவைக்கூட திருடியதற்கான ஆதாரம் இல்லை. இருந்தும், அரசியல் இலாபத்துக்காகக் கீழ்த்தரமான வேலைகளை இந்த அரசு செய்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.