மீதொட்டமுல்ல அசம்பாவிதம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த விவாதத்துக்கான நாள் தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் சட்டங்களின்படி அதற்கு முன் தினம் ஒன்றினை ஒதுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்றும் தினேஷ் குணவர்தன ஏற்கனவே சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே நடத்த வேண்டுமானால் அதற்குப் பிரதமரின் அனுமதி தேவையென சபாநாயகர் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதையடுத்து விவாதத்துக்கான தினம் மே மாதம் முதல் வாரத்தில் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருக்கின்றார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு மே மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







