ஐ.பி.எல். தொடரில் விளையாட பிராத்வைட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் அனுமதி

பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. ஏற்கனவே நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 1-3 என தொடரை இழந்தது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 7-ந்தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி 11-ந்தேதி நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் கார்லஸ் பிராத்வைட். இதில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் நடைபெறும் சமயத்தில் இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுகிறது.
ஐ.பி.எல். தொடரில் பிராத்வைட் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தால் ஐ.பி.எல். தொடரில் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் பிராத்வைட் என்ன முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவரை ஒருநாள் தொடரில் இருந்து நீக்கியது. மேலும் ஐ.பி.எல். தொடரில் விளையாட அனுமதி அளித்துள்ளது.
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காகவே ஒருநாள் தொடரை பிராத்வைட் ஒதுக்கியுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், ‘‘ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு செல்வதற்கு முன்பே ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டேன்’’ என்று பிராத்வைட் தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.