கேப்டன்கள் சந்திப்பு: செல்பி படத்துடன் ஐ.பி.எல். தொடருக்கு விராட் கோலி வாழ்த்து

ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. ஐதராபாத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 2-ம் இடம்பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
போட்டிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் 8 அணியின் கேப்டன்களும் இன்று சந்தித்தனர். இதற்கு முன் தொடர் தொடங்குவதற்கு முன் 8 அணிகள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது 8 அணி கேப்டன்களும் பங்கேற்பார்கள்.
இந்த தொடர் 10-வது சீசன் என்பதால் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் தொடக்க விழாவை கொண்டாட பி.சி.சி.ஐ. அனுமதி அளித்துள்ளது. இதனால் தொடருக்கு முன்பு அனைத்து கேப்டன்களும் சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆகவே, கேப்டன்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
அப்போது விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஜாகீர்கான் (டெல்லி டேர்டெவில்ஸ்), காம்பீர் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்), ஸ்மித் (ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்), வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ரெய்னா (குஜராத் லயன்ஸ்) ஆகிய 8 கேப்டன்கள் ஐ.பி.எல். கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதன்பின் 8 பேரும் செல்பி எடுத்துக் கொண்டனர். விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டு ‘‘உத்வேகம் அளிக்கும் கிரிக்கெட் செல்பி (The spirit of Cricket Selfie). உலகின் தலைசிறந்த தொடரான ஐ.பி.எல். தொடர் தொடங்கட்டும்’’ என்று பதிவு செய்துள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.