அரசாங்கம் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு உட்பட கிழக்கு மாகாணத்திலும் வேலையில்லா பட்டதாரிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலையற்றிருக்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.
அழிந்து கொண்டிருக்கும் வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீளக் கட்டியெழுப்பினாலே நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கலாம்.
இதனை விடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போதும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாக கைகட்டிக்கொண்டு நிற்கின்றது.
ஆனால் அரசாங்கம் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல, தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.