சென்னைக்கு அருகே விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராட்டம் நடத்த ஏழு நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உழவே தலை என்ற இளைஞர்கள் அமைப்பு சார்பில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த ஏற்பாடு நடைபெற்றது. போலீஸ் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஒய்எம்சிஏ நிர்வாகம் கொடுத்த அனுமதியை வாபஸ் பெற்றுள்ளார்கள்.
இதற்கிடையே போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 500 விவசாயிகள் சென்னையில் திரண்டுள்ளனர். இடம் கிடைக்காத காரணத்தால் இளைஞர்களின் உதவியுடன் ஆங்காங்கே தங்கியுள்ளார்கள்.
உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியின் கவனத்திற்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. போலீஸுக்கு இத்தகைய தடைவிதிக்க அதிகாரம் இல்லை என்று அவர் கூறியிருந்தார். இளைஞர்கள் சார்பில் சென்னை கமிஷினரிடம் முறையிடப்பட்டது.
அப்போது கமிஷனர் சென்னைக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் போராட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அவசர வழக்காக எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நீதிபதி ரமேஷ் விசாரித்தார். போலீசார் தரப்பில் இளைஞர்கள் வெளியிட்டதாக குறிப்பிடப்பட்ட சில மீம்ஸ்இ பதிவுகளைக் காட்டி சட்டம் ஒழுங்குக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி ரமேஷ் இளைஞர்கள் குழு அடுத்த ஏழு நாட்கள், ஆவடிக்கு அருகே உள்ள பாண்டேஸ்வரத்தில் போராட்டம் நடத்த அனுமதித்து இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளார். 5000 பேர் வரை கூடுவதற்கு அனுமதி அளித்து இருப்பதாக, இளைஞர்கள் சார்பில் தெரிவித்தார்கள்.
இதையடுத்து உழவே தலை அமைப்பு சார்பில் பாண்டேஸ்வரத்தில் போராட்டம் நடத்த இளைஞர்கள் திரண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலிருந்தும் வந்துள்ள விவசாயிகளும் பங்கேற்க உள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை நீதிபதி துரைசாமி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்கள்.







