கோலி உடல்தகுதி பெறாவிட்டால் கேப்டனாக டிவில்லியர்ஸ் செயல்படுவார்: பயிற்சியாளர் வெட்டோரி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவரது காயத்தன்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அவரது உடல்தகுதி குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும். 2-ந்தேதி அவர் அணியுடன் இணைகிறார்.

விராட் கோலி விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை கவனிக்கக்கூடும். ஆனால் கோலியின் நிலைமை குறித்து உறுதியாக தெரிந்த பிறகே அது பற்றி கூற முடியும். டிவில்லியர்ஸ் 2-ந்தேதி பெங்களூரு வந்தடைகிறார். கோலி ஆட முடியாத பட்சத்தில் சர்ப்ராஸ்கான், மன்தீப்சிங் போன்ற இளம் வீரர்களுக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு வெட்டோரி கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-ந்தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.