மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே ஸ்டாலின்தான்… டிடிவி தினகரன் பொளேர்!!

எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அபார வெற்றி பெறுவேன் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டிகள் கடுமையாக உள்ளதால் அதிமுகவின் இரண்டு அணிகளும், திமுகவும் கடுமையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் செய்தார். அப்போது மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,

ஓ.பன்னீர் செல்வம் அணி திமுகவின் பி அணியாகும். ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே மு.க.ஸ்டாலின்தான். இவர்கள் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடித்து இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார். அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களின் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருவதாக தினகரன் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசியபோது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.