நல்லாட்சி அரசு கொள்கை ரீதியில் செயற்பட வேண்டும்: டெனிஸ்வரன்

தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசு கொள்கை ரீதியில் செயலாற்ற வேண்டும் என அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு மக்களின் காணிகள் மீட்பு போராடத்தில் இன்று கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,

மூவின மக்களும் இலங்கை நாட்டுக்குள் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் தமிழ்மக்கள் தொடரும் போராட்டங்களுக்கு காரணமாக அமையும் பிரச்சினைகளை நல்லாட்சி அரசு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் மூலமே இலங்கை மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ வழிவகுக்கும்.

பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை படையினர் பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போனோரை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பதில் வழங்கப்பட வேண்டும்.

இது போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் மேன்மை ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு கவனம் செலுத்தி செயற்பட்டால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.

மேலும் இந்த பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்தால் நல்லிணக்கம் ஏற்படுவது சாத்தியமாகாது என்றார்.