நான்கு நாட்கள் உண்ணாவிரதம் காரணமாக ஆரோக்கியக் குறைபாட்டினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையின் மருத்துவமனை வட்டாரங்கள் இத்தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.
அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச பல்வேறு பிணையில் வெளியில் வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் அவரது பிணை மனு பல்வேறு நீதிமன்றங்களால் மறுதலிக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து, நான்கு நாட்கள் வரை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன் காரணமாக விமல் வீரவங்சவின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானதை அடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு திரவ விட்டமின்கள் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டுக்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அத்துடன் அவரது பாதுகாவலுக்கு மூன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் அவரது கட்டிலருகே பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இன்று மாலை விமல் வீரவங்சவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை தொடக்கம் திரவ உணவு வகைகளை உட் கொள்ளத் தொடங்கியிருக்கும் விமல் வீரவங்ச, தொடர்ந்தும் திட உணவுப் பொருட்களைத் தவிர்த்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







