ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்: வாக்குசீட்டு மூலம் தேர்தல்?

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. 63-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் வாக்குச் சீட்டு முறை மூலம் தேர்தல் நடைபெறும்.

தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

மருதுகணேஷ்( திமுக), மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன்( அதிமுக அம்மா), மதிவாணன் (தேமுதிக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்கட்சி), கங்கை அமரன் (பாஜக), தீபா (மேட் பேரவை) உட்பட 70 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாற்று வேட்பாளர்களுடன் மொத்தம் 82 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மாலைதான் மொத்தம் எத்தனை பேர் களத்தில் உள்ளனர் என்ற நிலவரம் தெரியவரும்.

63 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.