களை கட்டுகிறது ஆர்.கே.நகர் தேர்தல்.. ஏகப்பட்ட குழறுபடிகள் நடுவேயும் தீபா வேட்புமனு ஏற்பு!

சரியான தகவல்களை வேண்டுமென்றே மறைத்ததற்காக தீபா வேட்புமனு தள்ளுபடியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளதாக கூறி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பு நடத்திவரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக நேற்று ஜெ. நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு தண்டையார் பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயரிடம் வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

இந்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் உள்ளன. இந்த குளறுபடிகளை தெரிந்தே தீபா செய்துள்ளதாக கூறப்பட்டது. வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு இதை தீபா செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில் அனைத்துமே அப்பட்டமாக தெரியும் குளறுபடிகளாகும்.

பெரிய குளறுபடி என்ன தெரியுமா? தீபாவின் வேட்புமனுவில் தனது கணவர் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் தீபாவின் வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் முழுமையாக குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியானது.

தீபா தான் தொடங்கிய பேரவையை இதுவரை பதிவு செய்யாததால், பேரவையின் பதிவு எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட முடியவில்லை. இதுபோன்ற இந்னும் சில காரணங்களால் தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் தீபா என்று கூறினர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற கள நிலவரத்தை அறிந்துகொண்டு, சதி காரணமாக தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை என ஸ்டன்ட் அடித்து அரசியலில் முன்னேறலாம் என தீபா திட்டமிட்டே இதை செய்ததாக கூறப்பட்டது.

ஆர்கேநகரில் தோற்றால் அத்தோடு தனது அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என்பதால், இப்படி சில பல ஸ்டன்டுகளை அடித்து ஆதரவை பெருக்கலாம் என்பது அவரது திட்டமாக இருக்கலாம் என்றார்கள். ஆனாலும் தீபாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இது தீபாவுக்கே அதிர்ச்சியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.