இரட்டை இலைச்சின்னத்தை பாதுகாக்க அதிமுகவில் தகுதியானவர்கள் இல்லை.. சொல்கிறார் தமிழிசை!

அதிமுகவின் இரட்டை இலைச்சின்னத்தை பாதுகாக்க தகுதியானவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளளார்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறுபவர்கள் அரசியல் தெரியாதவர்கள் என்றும் தமிழிசை சாடியுள்ளார். சசிகலா அதிமுகவும் ஓபிஎஸ் அதிமுகவும் இரட்டை இலைச்சின்னத்துக்கு போட்டி போட்டன.

இதனால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கி வைத்தது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின்கம்பமும் சசிகலா தரப்புக்கு தொப்பியும் சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆர்கே நகரில் போட்டியிடும் இருகட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னை ஆர்கே.நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸ் துனையுடன் பாஜக தமிழகத்தில் காலுன்ற பார்க்கிறது என்ற அதிமுக எம்பி அன்வர் ராஜா குற்றம் சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

தகுதியானவர்கள் இல்லை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளது என்று கூறுபவர்கள் அடிப்படை அரசியல் தெரியாதவர்கள் என்றும் அவர் கூறினார். எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியானவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

முடக்கம் சரியான முடிவு இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது சரியான முடிவு தான் என்றும் அவர் கூறினார்.தேர்தலுக்கு பின் அதிமுக முடங்கிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இயற்கையே முடக்கியுள்ளது இரட்டை இலை சின்னம் தோற்றுப்போக கூடாது என்பதற்காக தான் இயற்கையே இந்த சின்னத்தை முடக்கியுள்ளது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

பலமுனை போட்டி நிலவும் ஆர்கே.நகரில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.