கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தான் நெருக்கடி: ஹேசில்வுட்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளமாக தரம்சாலா இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்திய அணி தொடரை கைப்பற்ற இங்கு வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதனால் முடிவு கிடைக்கக்கூடிய வகையிலேயே ஆடுகளத்தை தயாரித்து இருப்பார்கள். இப்போது நெருக்கடி எல்லாமே இந்தியாவுக்கு தான்.

நாங்கள் டிரா செய்தாலே கோப்பையை தக்க வைக்க முடியும். ஆனால் நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம். 2-1 என்ற கணக்கில் இந்திய மண்ணில் தொடரை வெல்வது அரிதாக நிகழக்கூடியதாகும். வேகமும், பவுன்சும் கூடிய ஆடுகளமாக இது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஒவ்வொரு முறையும் விராட் கோலி (5 இன்னிங்சில் 46 ரன்கள்) ரன் எடுக்காத போதெல்லாமல், அடுத்த போட்டியில் பெரிய இன்னிங்சை நெருங்கி விடுவார். அவர் தரமான ஒரு ஆட்டக்காரர். ஆனால் அடுத்த போட்டியில் அது மாதிரி நடக்காது என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஹேசில்வுட் கூறினார்.