ஜெயலலிதாவின் ஆவி தற்போது எம்ஜிஆர் சமாதியில் தான் உள்ளது என ஆர்.கே.நகர் வேட்பாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஜெயலலிதாவே தனது கனவில் வந்து சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தீயசக்திகள்தான் உள்ளன. அதனால் தான் அங்கு செல்பவர்களுக்கு தீயது நடப்பதாகவும் அந்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நம்பி என்பவர் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியார்களிடம் பேசினார். அப்போது எம்ஜிஆர் தான் தன்னை படிக்க வைத்ததாக கூறினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலிதா நெல்லையில் தனக்கு பொறுப்பு கொடுத்ததாக கூறிய அவர் ஜெயலலிதா இறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பு எந்த காரணமும் இன்றி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினார்.
ஜெயலலிதாதான் தன்னை நீக்கினாரா அல்லது வேறு யாரேனும் அவரது பெயரை பயன்படுத்தி நீக்கினரா என தெரியவில்லை என்றும் நம்பி தெரிவித்தார். பின்னர் இந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக கூறிய அவர் அதற்கான கொடியை அறிமுகப்படுத்தினர்.
கனவில் பேசிய ஜெ.ஆவி
இதைத்தெடர்ந்து பேசிய அவர் நான் எம்ஜிஆர் சமாதியில் மட்டும்தான் அஞ்சலி செலுத்தினேன் என்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். ஜெயலலிதா தனது கனவில் வந்து பேசியதாக அவர் கூறினார். ஜெயலலிதா தனது கனவில் கூறியதாக நம்பி சொன்னது, நான் எப்படி இறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் உயிரோடு இருக்கும்போதுதான் தொந்தரவு செய்தார்கள் என்றால், நான் இறந்த பிறகும் என்னை நிம்மதியாக விடமாட்டேன் என்கிறார்கள்.
இங்கு என் சமாதிக்கு வருபவர்கள் எல்லோரும் நாசமாகத்தான் போவார்கள். ஓ.பன்னீர்செல்வம் வந்தார், அவருடைய பதவி பறிபோனது. சசிகலா வந்தார், ஜெயிலுக்கு போனார். ஜெ.தீபா வந்தார், அவருடைய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினகரன் வந்தார், சின்னம் பறிபோனது.
தீய சக்திகள்தான் உள்ளன
என் சமாதியில் தீய சக்திகள்தான் வருகின்றன. அதனால் நானே தலைவரிடம் கேட்டுக்கொண்டேன். நீங்கள் உயிரோடு இருக்கும்வரை எவ்வளவோ பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றினீர்கள். சினிமா உலகம், அரசியல் என எவ்வளவோ பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றினீர்கள்.
தலைவரே அழைத்துக்கொண்டார்
ஆனால் ஒரு குடும்பத்திடம் இருந்து, காப்பாற்றாமல் விட்டுவிட்டீர்கள். அவர்கள் நான் இறந்தும் என்னை விடாமல் துறத்துகிறார்கள். அதனால் என் ஆவியையாவது காப்பாற்றுங்கள் என்று தலைவரிடம் கேட்டதால் என் ஆவியை தலைவரே அழைத்துக்கொண்டார்.
எம்ஜிஆர் சமாதியில் உள்ளேன்
என் சமாதியில் தற்போது என் ஆவி இல்லை. தலைவர் சமாதியில் தான் நான் இருக்கிறேன். அதனால் நீ தலைவர் சமாதியில் மட்டும் அஞ்சலி செலுத்தினால் போதும்” என்று ஜெயலலிதா தனது கனவில் கேட்டுக்கொண்டதாக நம்பி கூறினார்.
நம்பியின் பேச்சால் பரபரப்பு
இதன் காரணமாகவே தான் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாக தெரிவித்தார். ஏற்கனவே ஜெயலலிதா சமாதி அங்கு செல்பவர்களுக்கு தீயதை செய்வதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் நம்பி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







