அதிமுகவில் இருந்து நட்சத்திர பேச்சாளர் ஆர்த்தி விலகியுள்ளார். அதிமுகவில் என்ன நடக்கிறது என்றே தெரியாத குழப்பம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவும் அவரது கொள்கையும் இல்லாத கட்சியில் இருக்க விருப்பமில்லை என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் ஆர்த்தி. டிவி நடிகரும், சினிமா நடிகருமான கணேஷ்கரை மணந்து இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென கடந்த லோக்சபா தேர்தலின் போது ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தலுக்கு மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது கணவர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்து பிரச்சாரம் செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் ஓபிஎஸ் அணியில் இணைந்து வருகின்றனர். பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோரும் சசிகலா அணியில் இருநது ஓபிஎஸ் அணிக்கு சென்றனர்.
விலகலுக்கு காரணம்
இந்த நிலையில் நடிகை ஆர்த்தி கணேஷ்கர் இன்று அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். ஜெயலலிதாவும் அவரது கொள்கையும் இல்லாத கட்சியில் இருக்க விருப்பமில்லை என்று ஆர்த்தி தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நம்மை விட்டுச் சென்ற 4 மாதங்களுக்குள் எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தையும், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவையும் நாம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இழந்து விட்டோம். இந்திய அளவில் 3வது மிகப்பெரிய கட்சியாக உயர்த்திய ஜெயலலிதாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று கூறியுள்ளார்.
சின்னத்தை இழந்து விட்டோம்
மக்கள் நலனைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் பலரும் சண்டை போடுவதால் கட்சியையும், சின்னத்தையும் இழந்து விட்டதாக வேதனையுடன் ஆர்த்தி கணேஷ் தெரிவித்துள்ளார். இது அனைவரின் சுயநலத்திற்கு கிடைத்த பரிசு கூறியுள்ள ஆர்த்தி சண்டை போடுவதை விட்டு விட்டு ஒன்றிணைந்து கட்சியையும், சின்னத்தையும் மீட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நடிக்கத் தெரியவில்லை
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்துக்கொண்டிருக்கும் தனக்கு அரசியலில் நடிக்க தெரியவில்லை என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். எனவே மனவேதனையுடன் அரசியலை விட்டு விலகுவதாகவும் ஆர்த்தி கணேஷ் கூறியுள்ளார்.







