சசிகலா அணியினர் கட்சிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் ஓபிஎஸ் அணியினரின் கட்சிக்க அம்மா அதிமுக என்ற பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு மனு தாக்கல் செய்தன.
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகளிடம் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. சின்னம் முடக்கப்படுகிறது.ஒரு அணிகளும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரு அணிகளும் தங்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்த தகவலை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு பெயரை, இரு அணிகளும் தேர்ந்தெடுத்து அது குறித்த தகவலை காலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு தரப்பும் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை வரும் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக என்ற கட்சிப்பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து சசிகலா அணியினர் தங்களுடைய கட்சிக்கு அதிமுக அம்மா என்று பெயரிட்டுள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
அம்மா அதிமுக
இதேபோல ஓபிஎஸ் அணியினர் கட்சியின் பெயரை அம்மா அதிமுக என்று பெயரிட்டு அதை தேர்தல் ஆணையத்திற்கு மனுவாக அளித்தனர். இரு அணியினர் கட்சியிலும் அம்மாவும், அதிமுகவும் இடம் பெற்றுள்ளன.
வாக்காளர்களை கவருமா?
அதிமுக என்ற பெயரின் பின்னால் புதிதாக அம்மா என்ற பெயரை இணைத்துள்ளனர். ஜானகி அணி, ஜெ அணி என்று முன்பு இருந்தது. இப்போது சசிகலா பெயரை பயன்படுத்த அஞ்சும் டிடிவி தினகரன் அம்மா பெயரை இணைத்துள்ளார். ஓபிஎஸ் அணியும் கட்சியின் பெயரில் அம்மாவை முன்னாடி இணைத்துள்ளனர். இந்த பெயர்கள் வாக்காளர்களை கவருமா என்பது ஏப்ரல் 12ஆம் தேதி தெரியவரும்.
சுயேட்சை சின்னம்
ஓ.பன்னீர் செல்வத்தை சுயேட்சை சின்னத்தில் போட்டியிடச் சொன்ன டிடிவி தினகரனும் இடைத்தேர்தலில் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறார். அவருக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு இரட்டை மின் கம்பம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.







