ஆர்.கே. நகரில் பணத்திற்கும், பாசத்திற்கும் இடையேதான் போட்டி.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடக்கும் போட்டி என்று ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் கூறியுள்ளார். சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து அகற்றிவிட்டால் இரட்டை இலை சின்னத்தையும் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதா மறைந்ததினால் ஆர்.கே. நகரில் ஏற்பட்ட காலி இடத்திற்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் பெயரையோ இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் மதுசூதனன் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பணமா பாசமா
ஆர்.கே. நகரில் பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடக்கும் போட்டி. பணமா பாசமா என்றால் ஓபிஎஸ் தலைமையில் இருப்பவர்களிடம் பணமில்லை பாசம்தான் இருக்கிறது. பொட்டிப் பொட்டியாக பணத்தை வைத்துக் கொண்டும் குண்டர்களை வைத்துக் கொண்டும் சசிகலா அணியினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சசிகலா படம்

ஆனால், அங்கிருக்கும் அதிமுகவினர் சசிகலா படத்தைப் போடுவதற்கே பயப்படுகின்றனர். அவர்கள் திறந்து வைத்திருக்கின்றன தேர்தல் அலுவலகத்திலேயே சசிகலா படம் இல்லை. அந்த அளவிற்கு சசிகலாவிற்கு மக்களிடத்திலே பெயர் கெட்டுப் போய் கிடக்கிறது. இந்த குடும்பத்தின் மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.

விரட்டியடிக்க வாருங்கள்
சசிகலாவிற்கு ஆதரவளித்துள்ள அதிமுக நண்பர்கள், ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள்தான் உண்மையான அதிமுகவினர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். கையிலே காசில்லாதவர்கள் நெஞ்சிலே மாசில்லாதவர்களை வைத்து ஓபிஎஸ் கழகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரும் இங்கே வந்து சசிகலா கும்பலை விரட்டி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எம்ஜிஆரின் பக்தர்கள், ஜெயலலிதாவின் விசுவாசிகளை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி உறுதி
ஜெயலலிதாவே ஓபிஎஸ்ஸை 3 முறை முதல்வராக்கி இருக்கிறார். அப்படிப்பட்டவரால்தான் இந்த இயக்கத்தை கொள்கையோடும் மக்களின் பாசத்தோடும் அன்போடும் கழகத்தை நடத்த முடியும். அதிமுகவில் உள்ள ஒரு குடும்பத்தை மட்டும் ஒதுக்கிவிட்டால் நாம் அனைவரும் ஒன்றாகலாம். அதிமுகவை ஒன்றாக்கினால் இரட்டை சிலை சின்னத்தைப் பெறலாம். ஓபிஎஸ் தலைமையில் ஜெயலலிதாவின் ஆசியோடு நாங்கள் வெற்றி பெறுவோம்.