ஆர். கே. நகரில் சசி அணிக்கு ஆட்டோ, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின் கம்பம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்ஷா ஆகிய மூன்று சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பட்டியல் அளிக்கப்பட்டது. சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு மல்லுக்கட்டின.

இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகளிடம் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இரட்டை இலை
இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. சின்னம் முடக்கப்படுகிறது.ஒரு அணிகளும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

85 சின்னங்கள்
தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரு அணிகளும் தங்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்த தகவலை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அதிமுக அம்மா

தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை அடுத்து சசிகலா அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரை அதிமுக அம்மா என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக அம்மா என்ற கட்சியும் ஏற்கப்பட்டுள்ளது

தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ
சசிகலா அணி சார்பில் சுயேட்சை சின்னங்கள் அடங்கிய பட்டியல் அடங்கிய மனுவை அளித்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணியில் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் சசிகலா அணி மனு அளித்தது

ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு
ஆர்.கே. நகரில் சசிகலா அணியின் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆட்டோ ரிக்சா சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை மின் கம்பம்
இதே போல ஓபிஎஸ் அணி சார்பில் சின்னங்கள் ஒதுக்கக் கோரி 3 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அணித்தன. இரட்டை மின் கம்பம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு அம்மா அதிமுக பெயரை ஒதுக்கியுள்ளது.