அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த தடைக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த ஓபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சசிகலாவின் பதவி ஆசையால் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்றும் உண்மையான அதிமுக தாங்கள்தான் என்பதால் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிமுதல் இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. விசாரணை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
முடக்கப்பட்ட இலை
இதைத்தொடர்ந்து நேற்று மாலையே இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு 11 மணிக்கு இரட்டை இலைச்சின்னம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் இல்லை. சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கட்சி பெயர், கொடிக்கும் தடை
கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தவும் தேர்தல் தடைவிதித்தது. நியாயமான முறையில் நடக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அலுவலகத்தை முடக்க முடிவு
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமை அலுவகத்தை சசி தரப்பு பயன்படுத்த ஓபிஎஸ் அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அலுவலகமும் முடக்கப்படும்?
ஏற்கனவே ஓபிஎஸ் அணி எதிர்ப்பால் கட்சி சின்னம், பெயர், கொடி ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தகட்டமாக ஓபிஎஸ் அணியின் எதிர்ப்பால் கட்சி அலுவலகமும் முடக்கப்பபடும் நிலை உருவாகியுள்ளது.
போலீஸ் குவிப்பு
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.







