முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரன மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனல் அமல் கருணாசேகர ஆகியோரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அண்மையில் புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய மிக முக்கியமான இரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கபில ஹெந்தவிதாரன கடமையாற்றியிருந்தார்.
கபில ஹெந்தவிதாரனவின் தலைமையிலான குழு ஒன்றே சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை, கப்பம் கோரல்கள், கடத்தல்கள், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டதாக சரத் பொன்சேகா அண்மையில் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்தக் குற்றச் செயல்களை மேற்கொண்ட ஹெந்தவிதாரன தலைமையிலான 18 பேரைக் கொண்ட பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக்குழு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சிங்கள பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் தி நேசன் பத்திரிகையின் முன்னாள் பாதுகாப்பு செய்தியாளர் கீத் நொயார் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களுடனும் இந்தக் குழுவிற்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.







