ஸ்டீவன் சுமித், ஹேன்ட்ஸ்கோம்ப் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார்

இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், நடுவர் வழங்கிய எல்.பி.டபிள்யூ.வை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் படி அப்பீல் செய்வதா வேண்டாமா? என்பதை அறிய பெவிலியனில் இருந்த தங்களது வீரர்களின் உதவியை நாடியது பலத்த சர்ச்சையாக வெடித்தது.

டி.ஆர்.எஸ். முறைப்படி களத்தில் இருக்கும் வீரர்களிடம் மட்டுமே யோசனை கேட்க முடியும். அதை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சுமித்தை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்து விட்டது. இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், சுமித்தின் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று சீறியது.

இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.க்கு நேற்று அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோருக்கு எதிராக ஐ.சி.சியிடம் புகார் செய்துள்ளோம். ஹேன்ட்ஸ்கோம்ப், சுமித்திடம் பெவிலியனை நோக்கும்படி கூறுகிறார். பிறகு நடுவர் நைஜல் லாங் தலையிடுகிறார். இதற்கான ஆதாரமாக வீடியோ காட்சியை புகாரில் இணைத்துள்ளோம்.

ஐ.சி.சி.யின் நடத்தை விதி லெவல்2-ன் கீழ் புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இது போன்ற புகாரை போட்டி முடிந்த 48 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படியே செய்திருக்கிறோம். அவர்கள் கிரிக்கெட்டின் உண்மையான உத்வேகத்தை மீறி விட்டதாகவும், கிரிக்கெட் ஆட்டத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்தி விட்டதாகவும் அதில் சுட்டி காட்டியிருக்கிறோம்’ என்றார்.

போட்டி நடுவர் கிறிஸ் பிராட், ஸ்டீவன் சுமித்துக்கு சம்மன் அனுப்பி போட்டி முடிந்ததும் விசாரணை நடத்துவார் என்று இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் அவர் அது போன்று எதுவும் செய்யாமல் விட்டு விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போது இந்த பிரச்சினையை ஐ.சி.சி.யிடம் நேரடியாக எடுத்துச் சென்றுள்ளது. ஐ.சி.சி.யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.