இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருது கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் கோலி என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராவதே எனது விருப்பம் என, விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவதே எனது விருப்பம். என்னை சுற்றி சந்தேகக்காரர்களும் என்னை வெறுப்பவர்களும் உள்ளனர். ஆனால், நான் எனது உள்ளுணர்வை எப்போதும் நம்புகிறேன். எனது இதயம் சொல்வதை தவறாமல் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும் 120% சதவீதம் பயிற்சி செய்கிறேன். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் திருப்புமுனை வருடம் என்பது அவசியம். 2015-2016-ம் வருடம் எனக்குத் திருப்புமுனை வருடமாக அமைந்தது. கடின உழைப்பு, தினசரி பயிற்சிகள், தியாகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நன்றாக அமைந்தது. எனினும், சக வீரர்களின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.