150 ரன் இலக்கே போதுமானது: ஆட்டநாயகன் லோகேஷ் ராகுலின் நம்பிக்கை

பெங்களூரு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒன்றரை நாட்களுக்கு மேல் மீதமிருந்த நிலையில் 188 ரன்களை ஆஸ்திரேலியா சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது. ஆனால், 112 ரன்னில் சுருண்டது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் தோல்வியில் இருந்து திரும்ப விரும்பினோம். ஒவ்வொருவரும் அதை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் நோக்கம் மற்றும் நம்பிக்கை, நாம் எந்த வகையிலும் வெற்றி பெற முடியும் என்பதை காட்டியது.

ரசிகர்கள் ஆதரவு, மனவலிமை, சிறந்த ஆட்டம் ஆகியவை நம்ப முடியாத வகையில் இருந்தது. சாம்பியன் பார்ட்னர்ஷிப்பான புஜாரா- ரகானேவின் ஆட்டத்தால் 150 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியும். மனவலிமை, ஆட்டத்திறன் மற்றும் நுணுக்கங்களை கொண்ட தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களை நாம் பெற்றுள்ளோம். ஒரு பக்கம் இசாந்த் சர்மா நிலைத்து நிற்க, மறுபக்கம் சகா அடித்து விளையாடியது போனஸ்.

200 ரன்களுக்கு மேல் இலக்கு வைக்க விரும்பினோம். 225 ரன்கள்தான் வெற்றிக்கான ஒரே வழி என்று நினைத்தோம். 187 ரன்கள் முன்னிலைப் பெற்றபோது, பீல்டிங்கை சிறப்பாக நிறுத்தி இன்றைக்குள் ஆட்டத்தை முடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ராஞ்சி போட்டிக்காக எங்களால் காத்திருக்க முடியாது. இன்னும் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது வரை இந்திய அணி பின்னோக்கி சென்று கொண்டிருக்கவில்லை’’ என்றார்.

இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘முதல் போட்டியில் தோற்றபின், இங்கே வந்து நாங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. நாங்கள் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளோம். ஆனால், இளையோர்களை கொண்ட அணிக்கு இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனது சொந்த மைதானமாக இங்கேதான் நான் விளையாடியுள்ளேன். 150 ரன்கள் முன்னிலைப் பெற்றால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று நான் கூறினேன்.

3-வது நாள் பேட்டிங் செய்ய மிகவும் அற்புதமான நேரம் என்பது தெரியும். அந்த வகையில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தது அற்புதம். நான் 20 ரன்களை கடந்த போது நான் சதம் அடிப்பேன் என்று சொன்னார்கள். அது பிரச்சினையாக உள்ளது. தற்போது நாம் அரைசதம அடித்தால் அது பிரச்சினையாக உள்ளது. இதனால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். தொடக்க வீரர் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவது அவசியம். தொடக்க வீரர்கள் சொதப்பியது ஏமாற்றம் அளித்தாலும், அணி வெற்றி பெற்றுள்ளது. எனது தோள்பட்டையில் வலி இருந்தது. அதனால் சில ஷாட்டுகளை அடிப்பதை தவிர்த்தேன். எனினும், நான் எனது வழியில் பேட்டிங் செய்ய முடியும். அந்த பிரச்சினையுடன் நான் மிகழ்ச்சியாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.