செயின்ட் லூசியாவில் விளையாடிய உணர்வை தந்தது: லாகூர் போட்டி குறித்து டேரன் சமி கருத்து

இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது, இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் இலங்கை அணி தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது.

அதன்பின் பாகிஸ்தான் சென்று விளையாட அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டின. இதனால் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

சொந்த நாடான பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு முதல்படியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெற்றது. பெஷாவர் ஷல்மி – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகள் சார்பில் 9 வெளிநாட்டு வீரர்கள் லாகூர் சென்றிருந்தனர்.

பெஷாவர் அணியில் டேரன் சமி, மார்லோன் சாமுவேல்ஸ், இங்கிலாந்தின் ஜோர்டான் மற்றும் டேவிட் மேலன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். குவெட்டா அணியில் முன்னணி வீரர்களான கெவின் பீட்டர்சன், தைமல் மில்ஸ், ரசவ், லூக் ரைட், நாதன் மெக்கல்லம் போன்றோர் போட்டியை புறக்கணித்தனர். ஆனால், வங்காள தேசத்தின் அனாமுல் ஹக்யூ, தென்ஆப்பிரிக்காவின் மோர்னே வான் வைக், ஜிம்பாப்வேயின் சீன் எர்வின், வெஸ்ட் இண்டீசின் ரயாத் எம்ரிட் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்நிலையில், லாகூரில் விளையாடியது தனது சொந்த ஊரான செயினிட் லூசியாவில் விளையாடிய உணர்வை ஏற்படுத்தியது என்ற பெஷாவர் அணி கேப்டன் டேரன் சமி கூறியுள்ளார்.

மேலும் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டி குறித்து சமி கூறுகையில் ‘‘எனக்கு இந்த இறுதிப் போட்டி என்பது வழக்கமான போட்டி என்பதை விட உயர்வானது. சாதாரணமாக இருந்த என்னை பெஷாவர் அணியின் கேப்டனாக உயர அப்ரிடி காரணமாக இருந்தார். எங்களுடைய ஒரே நோக்கம் மீண்டும் பாகிஸ்தான் ரசிகர்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆகவே, இன்று (நேற்று) லாகூர் மற்றும் பெஷாவரில் நாங்கள் அதிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளோம் என்று உணர்கிறேன். இது மிகவும் சிறப்பான நாள்.

நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்லாதபோது, இந்த இடம் குறித்து ஏற்கனவே சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீங்கள் மாறுபட்ட கோணம் மற்றும் கருத்துக்களை பெறுவீர்கள். ஆனால் பெஷாவர் அணியின் உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி, ஷாகித் அப்ரிடி ஆகியோருடன் பேசிய பின்னர், அவர்கள் அளி்த்த ஊக்கம் இங்கே வரச் செய்வதற்கான முடிவை எடுக்க வைத்தது. நல்ல விஷயத்திற்காக லாகூர் வந்துள்ளதால், அனைத்து வீரர்களும் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

நான் லாகூரில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். பாகிஸ்தான் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடக்க இது சரியான திசை என்ற நம்பிக்கை உள்ளது. இங்கே விளையாடியது செயின்ட் லூசியா, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விளையாடிய உணர்வு ஏற்பட்டது என்பதை என்னால் சொல்ல முடியும்” என்றார்.