ரஹானேவை நீக்கும் கேள்விக்கே இடமில்லை: கும்பிளே

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஜிங்யா ரஹானே, புனேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 13 மற்றும் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் தனது கடைசி 5 டெஸ்டுகளில் 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அவர் காயத்தால் ஓய்வில் இருந்த சமயத்தில் இந்திய அணியில் இடம் பிடித்த கருண் நாயர் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முச்சதம்(303 ரன்) அடித்து வரலாறு படைத்தார். இருப்பினும் ரஹானே அணிக்கு திரும்பியதும் கருண் நாயர் வெளியே உட்கார வைக்கப்பட்டார்.

புனே டெஸ்டில் ரஹானே சொதப்பியதால், பெங்களூருவில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் அவருக்கு பதிலாக கருண் நாயரை சேர்க்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெங்களூருவில் நேற்று பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளேவிடம் இது தொடர்பாக கேட்ட போது அவர் கூறியதாவது:-

ரஹானேவை நீக்கும் கேள்விக்கே இடம் இல்லை. உண்மையிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்துள்ளார். சில ஆண்டுகளாக வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார். பெங்களூரு டெஸ்டில் களம் காணும் லெவன் அணியில் யார்-யார் இடம் பெறுவது குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. ஆனால் அணிக்கு தேர்வாகியுள்ள 16 வீரர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

கருண் நாயர் முச்சதம் அடித்தும் அணியில் இடம் பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. சரியான வீரர்களின் சேர்க்கை அமைந்து விட்டதால், அவரை சேர்க்க முடியாத சூழல் உருவாக்கி விட்டது. நாங்கள் எப்போதும் 5 பவுலர்களுடன் களம் இறங்கவே விரும்புகிறோம். இருப்பினும் மாற்று வீரராக இறங்கி முச்சதம் அடித்த ஒரு வீரரை நாம் வைத்திருப்பது நல்ல விஷயமே.

பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு அதிகமாக தெரியாது. சிறு வயது முதலே நான் இந்த மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். பொதுவாக இந்த மைதானம் பேட்டிங்குக்கு உகந்தது. நிச்சயம் இது முடிவு கிடைக்கக்கூடிய ஆடுளமாக இருக்கும். அதைத் தான் டெஸ்ட் போட்டியில் நாங்கள் விரும்புகிறோம்.

நான் விளையாடிய காலங்களில் ஆடுகளம் (பிட்ச்) எப்படி இருக்கும் என்பது குறித்து ஒரு போதும் சிந்தித்தது கிடையாது. எனது பந்து வீச்சை ஆடுகளத்தன்மையுடன் தொடர்பு படுத்தி நிறைய எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு பந்து வீச்சாளராக அல்லது ஒரு கேப்டனாக அல்லது பயிற்சியாளராக பிட்ச்சின் தன்மை குறித்து கவலைப்பட்டது இல்லை. ஆடுகளத்தை பார்த்த பிறகு, எந்த மாதிரி வியூகம் தேவை, எத்தகைய அணியுடன் இறங்குவது என்பதை முடிவு செய்வோம்.

இவ்வாறு கும்பிளே கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர் சில விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நம்புகிறேன். உலகின் சிறந்த பவுலர்களில் ஸ்டார்க்கும் ஒருவர். இங்குள்ள சூழலை வைத்து அனைவரும் சுழற்பந்து வீச்சாளர் குறித்து தான் பேசுகிறோம். ஆனால் இன்னும் அவர் தான் எங்களது மிகப்பெரிய ஆயுதம். அவரும், ஹேசில்வுட்டும் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் திறமையானவர்கள். அதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.