சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார்: சவுரவ் கங்குலி புகழாரம்

கடந்த சில மாதங்களாக விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வரும் அவருக்கு புனே டெஸ்டில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. முதல் போட்டியில் ஸ்டார்க் பந்தில் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹேண்ட்ஸ்காம்ப் கேட்சை முதல் ஸ்லிப் திசையில் நின்று கோட்டை விட்டார். மேலும் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுக்க விட்டுவி்ட்டார். இதனால் கோலியின் செயல்பாடு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “கோலியும் மனிதன் தான் என்பதால் அவரும் ஒரு நாள் தடுமாறத்தான் செய்வார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஒரு தளர்வான ஷாட்டை ஆடியதாக நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அடுத்தடுத்து நான்கு செஞ்சுரிகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா மண்ணிலேயே அடித்துள்ளார். இது போன்ற சாதனைகளை சச்சினிடம் கூட நான் பார்த்ததில்லை” என்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற நாளை மறுநாள் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.