உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தேவையற்றது: சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டு

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இப்போது தேவையில்லாதது. அதனைத் தமிழ் மக்கள் கோரவுமில்லை. இந்த ஆணைக்குழு அமைக்கப்படுவதானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை மறுக்கின்ற செயற்பாடகவே அமையும் என சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இன்னும் 2 மாதங்களில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைப்பதற்கான அனுமதிப் பத்திரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்துத் தொடர்பாக தெரிவிக்கையிலேயே சிவில் அமைப்புக்கள் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளன.

தொடர்ந்தும் சிவில் அமைப்பு தெரிவிக்கையில்,

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை அமைத்து நீதி வழங்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்கவேண்டும்.

அதன் பின்னர் வேண்டுமானால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படலாம். இந்த விடயத்தைக் இலங்கை அரசுக்குச் சிவில் அமைப்புக்கள் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்து விட்டன.

ஆனாலும், அரசு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதில் முனைப்புக்காட்டி வருகின்றது.

நீதிக்கான பொறிமுறை இன்னமும் இலங்கையில் அமைக்கப்படவில்லை. இந்தப் பொறிமுறை அமைக்கப்பட்ட பின்னர் அதற்குச் சமாந்தரமாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படலாம்.

நீதிப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அவ்வாறு செய்யப்படலாம். நீதிப் பொறிமுறை அமைக்கப்படாமல் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படுவது நீதியை மறுகின்ற செயற்பாடாகும் என்று மனித உரிமை ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிரான் அங்கிரல் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையின் ஊடாக நீதியைக் கோரினர், காணாமல்போனோர் விடயத்துக்குத் தீர்வைக் கோரினர்.

மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவைக் கோரவில்லை. இது இலங்கை அரசினால் திணிக்கப்படுகின்ற விடயமாகும். இதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என சிவில் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.