இன்று முதல்.. சசிகலா அக்காள் மகன் தினகரன் வசம் முறைப்படி வந்தது அதிமுக!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் சகோதரி வனிதா மணியின் மகன் டி.டி.வி. தினகரன், அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றிக் கொண்டார்.

இந்நிலையில் ஆட்சியையும் பிடிக்க முயற்சித்த வேளையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு பின்னர் சிறை சென்றார். அதற்கு முன்னதாக, தனது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி வழங்கிவிட்டு சென்றார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நிழலாக இருக்கும் டி.டி.வி.தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். சசிகலாவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர்தான் என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் தினகரனின் நியமனம் செல்லுமா என்று எதிர்பார்ப்பு உள்ளது.