ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு அதிமுகவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பான அறிக்கை தமிழக அரசும் அப்பல்லோ மருத்துவமனையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் தமிழக அரசுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இன்று மரண அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மறைந்த ஜெயலலிதா தனது புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எம்சிஏ விதிகளின்படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்றும் அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் அதில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.







